மட்டக்களப்பு தன்னாமுனையில் கடத்தல்; குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை!

மட்டக்களப்பு-ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த ஒருவரை கடத்திச் சென்று, சவுக்கடி பகுதியில் சிறை வைத்த, அதே பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபருக்கு, 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.

கடந்த 2007 டிசம்பர் 23ம் திகதி, தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த ஒருவரை கடத்தி சென்று சவுக்கடி பகுதியில் சிறை வைத்த சம்பவம் தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்டவருக்கு எதிராக ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தொடர் விசாரணையின் பின்னர், வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு 2022ம் ஆண்டு மாற்றப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது

இந்த நிலையில், வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி.தர்சிகா ஆகியோர் ஆஜராகி வாதாடி வந்த நிலையில், கடந்த 15-ம் திகதி வியாழக்கிழமை, குறித்த நபர் குற்றவாளியாக நீதிமன்றில் இனங்காணப்பட்டு தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டது

நபர் ஒருவரை பலவந்தமாக கடத்தி சென்று சிறைவைத்த குற்றத்திற்கு, தண்டனை சட்டக்கோவை 32 ஆம் 356 பிரிவின் கீழ் 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *