வாட்ஸ்அப் பண மோசடியில் ஈடுபட்ட பெண் கட்டுநாயக்கவில் கைது!

வாட்ஸ்அப் குழுவின் ஊடாக பெறுமதியான பரிசுப் பொதியொன்றை வழங்குவதாகக் கூறி, 14 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நுகேகொடைப் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஆவார்.

குறித்த பெண், வாட்ஸ்அப் குழுவொன்றின் மூலம் பாதிக்கப்பட்ட நபருக்கு பெறுமதியான பரிசுப் பொதி கிடைக்கவுள்ளதாகத் தெரிவித்து நம்பவைத்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த நபர், சந்தேகநபருக்குச் சொந்தமான வங்கிக் கணக்கிற்கு 14 இலட்சத்து 55 ஆயிரம் ரூபா பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.

இது தொடர்பில் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண அலுவலகத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை (30) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *