பூடானில் பனிப்பாறை ஏரி உடைப்பு: எல்லையோரப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

பூடான் நாட்டில் பனிப்பாறை ஏரி திடீரென உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இந்தியாவின் மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் எல்லையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பூடானின் வடமேற்குப் பகுதியில் உள்ள காசா மாவட்டத்தில் அமைந்துள்ள ஷிண்டாபு பனிப்பாறை ஏரி நேற்று மாலை திடீரென உடைந்தது. இதனால் ஏரியிலிருந்த நீர் பெருக்கெடுத்து மோ சூஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரபலமான இயற்கை ஊற்றான காசா சாச்சு பகுதியில் இருந்த கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. எனினும், முன்னெச்சரிக்கையாக அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

வெள்ளநீர், புனாகா ட்சோங் பகுதியில் இருந்து சுமார் 8 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஸ்ரீகாங் பகுதியைக் கடந்துள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இந்தியாவின் அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அசாமின் துப்ரி மாவட்டம் மற்றும் மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதி, அலிபுர்துவார், ஜல்பைகுரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கு வங்காளத்தின் கூச் பெகார் பகுதியில் சங்கோஷ் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *