களுத்துறையில் இரட்டை கொலை !

களுத்துறை, நாகொட பகுதியில் உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவலை, ரணால பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தபோதே குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி காலை நாகொட பகுதியிலுள்ள உணவகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 54 வயதான உணவக உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த அவரது மனைவி பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியிருந்தனர்.

தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் சிசிடிவி (CCTV) காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், பிரதான துப்பாக்கிதாரி கடுவலை பகுதியில் ஒளிந்திருப்பதை களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் கண்டறிந்தனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘திப்பிட்டிகொட சக்தி’ என்பவரின் உறவினர் வீட்டில் மறைந்திருந்த 32 வயதான பதுளை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

‘களுத்துறை நவீன்’ என்பவரின் ஒப்பந்தத்துக்கு அமைவாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவத்துக்கு குப் பயன்படுத்தப்பட்ட T-56 ரக துப்பாக்கி வேறொரு நபரால் இவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டின் பின்னர் அந்தத் துப்பாக்கி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட பரிமாற்றத்திற்கு அருகில் வைத்து பிறிதொரு நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *