இன்றைய வானிலை!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியுடனும் கிழக்குப் பகுதியின் மத்தியுடனும் இணைந்து காணப்படுகின்ற தாழ் அமுக்கம் தீவிரமடைந்து பலமிக்க தாழமுக்கமாக மாறியுள்ளது. இது மேற்குத் திசையை நோக்கி நகர்வதுடன் மேலும் தீவிரமடைந்து இன்றைய தினம் ஒரு சூறாவளியாக விருத்தியடைகின்றது. இந்த சூறாவளியானது நாளையளவில் மேலும் தீவிரமடைந்து மிகச் சக்தி வாய்ந்த சூறாவளியாக வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் நோக்கி நகர்ந்து இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திற்கும் விசாகா பட்டினத்திற்கும் இடையாக தரையைக் கடக்கும்.

இந்த சூறாவளிக்கு வங்காள தேசத்தினால் முன்மொழியப்பட்ட “அர்ணாப்” எனும் பெயர் சூட்டப்படும்.

இந்த தாழ் அமுக்கத் தொகுதி இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 1300 km தொலைவிற்கு அப்பால் காணப்படுகின்றது. இதனால் இலங்கைக்கு நேரடியான தாக்கங்கள் இல்லாத போதிலும் நாட்டை ஊடறுத்து காற்று வீசுவதனால் அடுத்து வரும் சில தினங்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் பலத்த மழை பெய்யக்கூடும்.

மறு அறிவித்தல் வரையில் கடல்சார் ஊழியர்களும் மீனவ சமூகத்தினர்களும் வங்காள விரிகுடாவின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

இதேவேளை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய, வட மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 – 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கும் ஏற்படக்கூடும்.

ஆகையினால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட்டு இழப்புக்களை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *