குவைத்தில் அலி சபா அல்-சலீம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய பகுதிகளில் இரு இலங்கைப் பெண்கள் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த இரு மரணங்களும் சந்தேகத்திற்கிடமான மரணங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதல் சம்பவத்தில், அலி சபா அல்-சலீம் பகுதியில் உள்ள வீடொன்றின் மேற்கூரையில் அமைந்துள்ள களஞ்சிய அறையில், பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அஹ்மதி பொது அரச சட்டத்தரணி அலுவலகம் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட்டதுடன், சடலத்தைத் தடயவியல் துறைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுத்துள்ளது. மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அல்-நஹ்தா பகுதியில் மற்றொரு இலங்கைப் பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டு, ஜஹ்ரா பொது அரச சட்டத்தரணி அலுவலகத்தின் அறிவுறுத்தலின் பேரில் தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இரண்டாவது சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள், மருத்துவப் பரிசோதகர்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரு பெண்களினதும் மரணத்திற்கான காரணங்கள் மற்றும் சம்பவங்களின் பின்னணி குறித்து அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

