ஏறாவூர் பாடசாலைக்குள் புகுந்த யானைகள்; மயிரிழையில் தப்பிய மாணவர்கள்!

மட்டக்களப்பு, ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி விபுலானந்தா பாடசாலையின் மதில் சுவரை உடைத்துக்கொண்டு யானைக் கூட்டம் உள்நுழைந்ததில், இரவு நேர வகுப்புகளில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

நேற்று இரவு சுமார் 8 மணியளவில், ஏறாவூர் நகர சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள குப்பை மேட்டுப் பகுதியை நோக்கி வந்த யானைக் கூட்டமே, பாடசாலையின் மதில் சுவரை உடைத்துக்கொண்டு வளாகத்திற்குள் நுழைந்துள்ளது.

இதன்போது பாடசாலையில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் யானைகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியதாகப் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

குப்பை மேட்டுப் பகுதியை நோக்கி யானைகள் வருவதால், அருகிலுள்ள பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். யானைகளின் நடமாட்டத்தால் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

சம்பவ இடத்திற்குச் சென்ற ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன், யானைகளால் மாணவர்களுக்கோ பொதுமக்களுக்கோ உயிராபத்து ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்பது யார் எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், குப்பை மேட்டுப் பகுதியை நோக்கி வரும் யானைகள் நகருக்குள்ளும் குடியிருப்புகளுக்குள்ளும் நுழைவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, சம்பவ இடத்திற்குச் சென்ற ஏறாவூர் நகர சபையின் பிரதித் தவிசாளர் கஜேந்திரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் ஆகியோர், இவ்விடயம் தொடர்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்தனர்.

பாடசாலை வளாகத்திற்குள் யானைகள் நுழைந்துள்ள சம்பவம், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *