சக்திவாய்ந்த சாம்பி சூறாவளி தாய்வானை நெருங்கி வருவதால், இன்று வெள்ளிக்கிழமை (23) கிட்டத்தட்ட முழுத் தாய்வானும் ஸ்தம்பித்துள்ளதுடன், பொதுமக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பசிபிக் பெருங்கடலில் இந்த ஆண்டின் வலிமையான சூறாவளிகளில் ஒன்றாக உருவெடுத்த சாம்பி, அதன் மையப்பகுதியில் சுமார் மணிக்கு 191 கி லா மீற்றர் வேகத்தில் பலத்த காற்றைக் கொண்டு வீசி வருகிறது.
புயல் அதன் பாதையில் சற்றுக் பலவீனமடைந்து வருவதோடு, நேரடியாகத் தாய்வான் மீது கரையைக் கடக்காது என எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் பிரமாண்டமான விட்டம் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளைப் போர்த்தியுள்ளது. இதன் தாக்கம் கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாகாணமான யிலான் உட்பட பகுதிகளில் மணல் மூட்டைகள் தயார்படுத்தப்பட்டு, வெள்ளப்பெருக்கு அபாயத் தடுப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக நீர்மூழ்கி ஊர்திகள் மற்றும் மீட்புப் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்வான் போக்குவரத்து அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, இன்றையதினம் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து உள்நாட்டு விமானங்களும் (262 விமானங்கள்), மற்றும் 669 சர்வதேச விமானங்களும் முற்றிலுமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.
தாய்வானின் நிதிச் சந்தைகள் இன்று மூடப்பட்டுள்ளன. சீனக் கடற்கரைக்கு அருகில் உள்ள கிங்மென் தீவுகளைத் தவிர ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் தாய்பேயில் லேசான மழையுடன் கூடிய காற்று வீசி வருவதுடன், சுரங்கப்பாதை உட்பட பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்கி வருகின்றன. வடக்கிலிருந்து தெற்கு செல்லும் அதிவேக ரயில் சேவை வழமைபோல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

