சம்மாந்துறையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் காட்டு யானை!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் சுகயீனமுற்ற நிலையில் மீட்கப்பட்ட சுமார் 15 வயதுடைய காட்டு யானைக்கு வனவிலங்கு மருத்துவக் குழுவினரால் தீவிர சிகிச்சைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 21ஆம் திகதி வயல் பகுதியில் உள்ள சேற்றில் எழுந்து நிற்க முடியாமல் வீழ்ந்து கிடந்த நிலையில் குறித்த யானை மீட்கப்பட்டிருந்தது.

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வளத்தாப்பிட்டி களப் பாதுகாப்புப் படைப் பிரிவு அலுவலகப் பொறுப்பதிகாரி எம்.ஜி. அஜித் குணரத்ன விடுத்த அவசரக் கோரிக்கைக்கு அமைவாக, சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், யானையின் சிகிச்சை மற்றும் மீட்புப் பணிகளுக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளார்.

இதற்கமைய, அவசரச் சிகிச்சைகளைத் தடையின்றி மேற்கொள்வதற்கான கூடார வசதிகளும், யானையை மீட்பதற்குத் தேவையான கனரக வாகன வசதிகளும் சம்மாந்துறை பிரதேச சபையினால் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

யானையின் உயிரைப் பாதுகாத்து அதனை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் நோக்கில், வனவிலங்கு மருத்துவக் குழுவினர் நேற்று (22) முதல் சம்பவ இடத்தில் தொடர்ந்து தங்கி தீவிர சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *