மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் உல்லைக்குளம் பகுதியில் காணி எல்லை நிர்ணயம் தொடர்பான நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி தமிழ் மற்றும் முஸ்லிம் விவசாயிகள் (21) புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூதூர் பிரதேச செயலாளர் மற்றும் நில அளவைத் திணைக்கள அதிகாரிகள், திருகோணமலை மாவட்டச் செயலாளரின் பணிப்புரைக்கு அமைவாக, இக்பால் நகர் மற்றும் நல்லூர் பிரதேசங்களுக்கு இடையிலான எல்லைகளைப் பார்வையிடுவதற்காக உல்லைக்குளம் பகுதிக்கு வருகை தந்தபோதே விவசாயிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
உல்லைக்குளம் பகுதியில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் விவசாயிகள் நீண்டகாலமாக நெற்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த காணிகளுக்கான ஆவணங்கள் மற்றும் பத்திரங்கள் தம்மிடம் இருப்பதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், தாம் பல தசாப்தங்களாக பஸ் பயன்படுத்தி வரும் விவசாய நிலங்கள் தொடர்பில் தற்போது எழுந்துள்ள எல்லை நிர்ணய விவகாரம் தமது விவசாய நடவடிக்கையை பாதிக்கக்கூடும் எனக் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த காணிகளின் ஒரு பகுதி நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களுக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து, அந்தக் காணிகளைத் தமக்கு மீள வழங்க வேண்டுமெனப் பழங்குடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘குவேனி’ அமைப்பு கோரிக்கை முன்வைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே, பழங்குடியைச் சேர்ந்த 33 பேருக்கு தலா 2 ஏக்கர் வீதம் 66 ஏக்கர் நெல் விவசாய நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது.எனினும் குறித்த காணி விவசாயத்துக்கு பொருத்தமில்லையென அவர்கள் தெரிவிப்பதோடு வேறு இடத்தில் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், தற்போது தாம் நீண்ட காலம் விவசாயம் செய்து வரும் காணிகளின் ஒரு பகுதி எல்லை நிர்ணயத்தின் பின்னர் பழங்குடி மக்களுக்கு வழங்கப்படலாம் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, காணி எல்லை நிர்ணயம் தொடர்பான நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது வசமுள்ள காணி ஆவணங்கள் மற்றும் நீண்டகால விவசாயப் பயன்பாட்டைக் கருத்திற்கொண்டு, தமது காணி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும், இன்று குறித்த பகுதியில் காணி எல்லை நிர்ணய அளவீடுகள் மேற்கொள்ளப்படவில்லை.ஏற்கனவே எல்லை நிர்ணயம் செய்த இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
காணி உரிமை, நீண்டகால விவசாயப் பயன்பாடு மற்றும் பிரதேச எல்லை நிர்ணயம் தொடர்பாக எழுந்துள்ள இவ்விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்கள் மற்றும் காணி ஆவணங்கள் உரிய முறையில் ஆராயப்பட்டு, சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளுக்கு அமைவாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதன்போது மூதூர் பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள், மூதூர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ,கமநலசேவை நிலைய உத்தியோகத்தர்கள்,விவசாயிகள், உள்ளிட்டோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

