2030க்குள் 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலக்கு – விஜித ஹேரத்!

இலங்கை 2030ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 50 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்கு ஈர்ப்பதை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி மூலோபாயத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் சுற்றுலாத்துறை வேகமான வளர்ச்சியைக் கண்டு வரும் இந்தச் சூழலில், வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கே அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், சுற்றுலாப் பொலிஸ் பிரிவுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அத்துடன் சாதாரண பொலிஸ் சேவையிலிருந்து வேறுபட்ட ஒரு விசேட கட்டமைப்பாக சுற்றுலாப் பொலிஸாரை மாற்றியமைக்கவும், அந்தப் பிரிவுக்குப் புதிய அதிகாரிகளைப் புதிதாக இணைத்துக்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் ஈர்ப்பதற்கு நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை நிலவுவதுடன், இனம், மதம் மற்றும் தீவிரவாத மோதல்கள் அற்ற அமைதியான சூழல் பேணப்படுவதும் மிகவும் அவசியமானது என அமைச்சர் வலியுறுத்தினார்.அரசியல் செய்திகள்

கொவிட்-19 பெருந்தொற்று பரவலால் பாரிய பின்னடைவைச் சந்தித்த இலங்கையின் சுற்றுலாத்துறை தற்போது படிப்படியாக மீட்சி அடைந்து வருகின்றபோதிலும், அதன் நீண்டகால ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய மேலும் பல தொடர்ச்சியான முயற்சிகள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் இயற்கை அழகு, கலாசார பாரம்பரியம் மற்றும் விருந்தோம்பல் பண்பு ஆகியவற்றை நாம் பாதுகாப்பது மிக முக்கியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *