நீதிமன்றங்களினால் வழங்கப்படும் தீர்ப்புகளே நாட்டின் சட்டம் தொடர்பான இறுதியான தீர்மானங்களாகும் எனவும், அவற்றுக்கு அரசாங்கம் முழுமையாகக் கட்டுப்படும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டப் பெண்கள் மாநாட்டில் இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பால் அரசாங்கத்திடமிருந்து வேறு தீர்மானங்களை எவரும் எதிர்பார்க்க வேண்டாம் எனத் தெரிவித்த ஜனாதிபதி, உயர்நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கிய பின்னர் அதனை நீக்குமாறு கோரி கூச்சலிடுவதால் பயனில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் உரிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படாத நாட்டில் எதிர்காலச் சந்ததியினருக்குப் பாதுகாப்பு இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், எதிர்காலத் தொழிலாளர் சந்தைக்கு ஏற்ற திறன்களைக் கொண்ட பிள்ளைகளை உருவாக்குவதற்காகப் பழைய கல்வி முறைமையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். இதன் ஒரு பகுதியாக, 6,000க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு அதிவேக ஃபைபர் இணைய இணைப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் வளர்ச்சிக்குச் சட்டத்தின் வீழ்ச்சியும் அரசியல் பாதுகாப்பும் காரணமாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். தமது அரசாங்கத்தின் கீழ் இத்தகைய சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் உறுதியளித்தார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளில் 2,484 கிலோகிராம் ஹெரோயின், 3,301 கிலோகிராம் ஐஸ் மற்றும் 297 கிலோகிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன், பல்வேறு வகையான துப்பாக்கிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இன, மதவாதங்களுக்கு இடமளிக்காமல் தேசிய நல்லிணக்கத்தைப் பேணுவதுடன், ஊழல் மற்றும் பொதுச் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்தியவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

