குருக்கள்மடம் புதைகுழியில் வெட்டுக்காயங்களுடன் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி அகழ்வின்போது, மண்டை ஓடுகள் உள்ளிட்ட மனித எலும்புத் தொகுதிகள் வெட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்துள்ளார்.

கடந்த 06ஆம் திகதி முதல் நேற்று (14) வரை, களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக ஒன்பது நாட்களாக இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் இரண்டாம் கட்டம் நேற்று நிறைவடைந்தது. அகழ்வின்போது கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அவை மேலதிக பகுப்பாய்வுகளுக்காக சட்ட வைத்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளின் அறிக்கைகள் கிடைத்த பின்னரே, இந்த விவகாரம் தொடர்பான முழுமையான தகவல்களை வெளியிட முடியும். மேலும், குறித்த பகுதியில் செயற்கையான கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும், மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு மேலாகக் குப்பைகள் இடப்பட்டு மறைக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாகவும் முபாறக் முஅஸ்ஸம் கூறியுள்ளார்.

இந்தப் பகுதி குற்றம் இடம்பெற்ற இடமாக இருக்கக்கூடும் என்பதற்கான பல்வேறு காரணிகள் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்ட அறிக்கைகள் கிடைத்த பின்னர் நீதிமன்றத்தின் ஊடாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார். அறிக்கைகள் பெரும்பாலும் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *