சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: ஐவர் கைது!

நுவரெலியா, அம்பேவல – பட்டிப்பொல பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களை நுவரெலியா மாவட்ட வன அலுவலக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த 12ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், நேற்று (13) நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, ஒவ்வொருவருக்கும் தலா 45,000 ரூபா வீதம் மொத்தம் 2,25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன், பாதுகாக்கப்பட வேண்டிய வனப்பகுதிக்குச் சேதம் ஏற்படுத்தியமைக்காக 25,000 ரூபா இழப்பீடு செலுத்தவும் நீதவான் உத்தரவிட்டார். இதன்படி, மொத்தமாக 2,50,000 ரூபா செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பெல்மடுல்ல, பலாங்கொடை, நாவலப்பிட்டி மற்றும் அம்பேவெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் பல நாட்களாக குறித்த வனப்பகுதியில், கொத்மலை ஓயாவுக்கு நீர் செல்லும் எல்ஜின் ஓயாவுக்கு அருகில் பெரிய குழிகளைத் தோண்டி, மாணிக்கக்கல் அடங்கிய படிமங்களை அகழ்ந்தெடுத்துள்ளனர்.

பின்னர் அவற்றை எல்ஜின் ஓயாவில் கழுவியதன் மூலம் சுற்றுச்சூழலுக்குப் பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *