பிள்ளையான் உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் அண்ணாத்துரை தஷ்ஷினி, இன்று (13) காணொளி ஊடாக ஆஜர்படுத்தப்பட்ட பிள்ளையான் மற்றும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகிய மூவரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை, காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சி உறுப்பினர் உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இக்கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2025 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட பிள்ளையான், பின்னர் 2025 நவம்பர் மாதம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் மீண்டும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக 2026 ஜூன் 17ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்றைய விசாரணையின்போது, லண்டனில் வசிப்பதாகக் கூறப்படும் மற்றொரு சந்தேகநபரான முகமட் பாய்ஸ் எனப்படும் பொலிஸ் பாயிஸை நீதிமன்றில் ஆஜர்படுத்தாத நிலையில், அவருக்கு எதிரான பிடியாணையைத் தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *