யாழ்ப்பாணம் மாநகரசபையின் 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட 264 சபைத் தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல், மாநகர பிரதி முதல்வர் தலைமையில் நேற்று (12) நடைபெற்றது.
மாநகர முதல்வரின் பணிப்புரைக்கு அமைவாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில், குறித்த காலப்பகுதியில் எடுக்கப்பட்ட 264 தீர்மானங்களில் 206 தீர்மானங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
எஞ்சிய 58 தீர்மானங்கள் இதுவரை நிறைவு செய்யப்படாத நிலையில், அவற்றின் தற்போதைய அமுலாக்க நிலைமை தொடர்பில் துறைசார் அதிகாரிகள் மற்றும் கிளைத் தலைவர்கள், மாநகரசபை உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தனர்.
இக்கலந்துரையாடலில் மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, கிளைத் தலைவர்கள் மற்றும் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

