மட்டக்களப்பு புதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மணல் ஏற்றிவந்த டிப்பர் ஒன்று பாடசாலை விட்டு தனது மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆசிரியை மீது மோதியதில் குறித்த ஆசிரியை சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார்.
ஆசிரியர் தினமான இன்று பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இவ் துயரகரமன நிகழ்வு நடந்துள்ளது.
உயிரிழந்தவர் மட்டக்களப்பு சூரியா லேனைச் சேர்ந்த 58 வயதான திருமதி மதிவதனி கமலநாதன் எனும் ஆசிரியை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஆசிரியை 30 வருடங்களுக்கு மேல் ஆசிரிய சேவையை புரிந்தவர் என்பதுடன் தற்போது மட்/ வலையிறவு மெதடிஸ்த மிஷன் தமிக் கலவன் பாடசாலையில் ஆசிரியையாக பணி புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்திய மணல் ஏற்றிவந்த கனரக டிப்பர் சாரதி அவவிடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திலும் நிறைவடையும் வேளையிலும் இப் பிரதேசத்தினூடாக மணல் டிப்பர்களின் போக்கு வரத்து அதிகரித்துள்ளது. தினமும் ஆசிரியர்களும் மாணவர்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டே இவ் வீதிகளால் பயணிக்கின்றனர். குறிப்பாக வலையிறவு மற்றும் மண்முனை பாலங்களை அண்மித்த வீதிகளில் இந் நிலையினை அவதானிக்க முடிகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

