அனோஜனுக்காக நாளை சவுதி செல்லும் இலங்கை தூதுக்குழு!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்காக அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று நாளை செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியாவுக்குப் புறப்படவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவே இதற்காகப் புறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சவுதி அரேபியாவிலுள்ள சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி சரியான முறையில் மேன்முறையீட்டை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

பேஸ்புக் சமூக ஊடகத்தில் பதிவிட்ட பின்னூட்டமொன்றின் மூலம் மத நிந்தனை செய்ததாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினாலேயே சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதித்து சவுதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தண்டனையைக் குறைத்துக் கொள்வதற்காக இராஜதந்திர மட்டத்தில் ஏற்கனவே தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *