வடகொரியா தனது இடைநிலை அதிவேக மூலோபாய ஏவுகணையைச் (Hypersonic Intermediate-range Strategic Missile) சனிக்கிழமை அதிகாலை வெற்றிகரமாகச் சோதனை செய்து பார்த்துள்ளதாக வடகொரிய அரச ஊடகமான வடகொரிய அரச ஊடகம் ஞாயிற்றுக்கிழமை (04) செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தனது மனைவி ரி சொல்-ஜூ மற்றும் மகள் ஜூ-ஏ ஆகியோருடன் இணைந்து நேரடியாகப் பார்வையிட்ட இந்த ஏவுகணைச் சோதனையானது, நாட்டின் அணுசக்தி தற்காப்புத் திறனை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்குக் கடலை நோக்கிப் பாய்ந்த இந்த ஏவுகணை 1,000 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதாக வடகொரியா உரிமை கோரியுள்ளது.
குறைந்த உயரத்தில் தனது பயணப் பாதையை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்ட ஹ்வாசோங் 16 நா ரக ஏவுகணையை வடகொரியா சோதனை செய்திருக்கலாம் என இராணுவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.
எதிரிகளுக்குத் தங்களது தாக்குதல் திறனின் ஆபத்தையும் நம்பகத்தன்மையையும் தொடர்ச்சியாக உணர்த்தும் வகையில் மூலோபாயத் தாக்குதல் ஆயுதங்களை மேலும் நவீனப்படுத்த வேண்டும் என கிம் ஜோங் உன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி கொரிய எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கண்ணிவெடி வெடிப்பில் தென்கொரிய வீரர்கள் மூவர் காயமடைந்த சம்பவத்திற்குப் பின்னர் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
வடகொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனையானது ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை நேரடியாக மீறும் செயல் எனத் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தென்கொரிய-அமெரிக்க கூட்டுப் படைகள் எந்தவொரு அச்சுறுத்தலையும் கண்டறிந்து எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது

