யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த, இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 187.56 ஏக்கர் நிலப்பரப்பு உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் மாவட்ட செயலகத்தில் வைத்து கையளித்தார்.
புதிதாக அமையவுள்ள விசேட முதலீட்டு வலயத்திற்காக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள 351.23 ஏக்கர் அரச காணிப் பரப்பிற்குள், தற்போது பாதுகாப்புப் படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட இந்த 187.56 ஏக்கர் காணியும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

