இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்குள்ளான குறைந்த முதலீட்டில் புதுமுக கலைஞர்களை கொண்டு திரைப்படத்தை உருவாக்கி பல தடைகளை கடந்து படமாளிகையில் வெளியிட செய்து சாதனை படைத்து வரும் இயக்குநர் பகவதி பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிவ சம்போ..’ இது போன்ற படங்களுக்கு விசாலமான மனதுடன் ஆதரவளிக்கும் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
காவல் நிலையத்தில் அதிகாரியாக பொறுப்பேற்கும் அர்ஜுன்( தில் நட்ராஜ்) தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இரண்டு கொலைகளை செய்கிறார்.
பின்னர் அவரது நண்பர்கள் இரண்டு கொலைகளுக்கும் உனக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட.. முதலில் மறுக்கும் அர்ஜுன்..அதை ஏன் செய்தேன்? என விவரிக்கிறார்.
அவருடைய சொந்த வாழ்க்கையில் மறக்க முடியாத கசப்பான சம்பவம் நடைபெற்றதை சொல்கிறார். அது என்ன? அதனால் பாதிக்கப்பட்டவரின் எதிர் வினை என்ன? அதன் பிறகு என்ன நடந்தது? இதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
முதல் பாதி திரைக்கதையில் முன் வரிசையில் அமர்ந்து பார்க்கும் ரசிகர்களுக்கான காட்சிகள் அதிகம்.
வழக்கமான பழிக்கு பழி வாங்கும் கதையாக இருந்தாலும் திருமண மோசடி மன்னர்களால் பாதிக்கப்படும் பெண்கள் – அவருடைய பெற்றோர்கள் தொடர்பான சமூகம் சார்ந்த விடயங்களை இயக்குநர் பேசியிருப்பதால் வரவேற்பு பெறுகிறது.
அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் தில் நட்ராஜ் காவல்துறை அதிகாரிக்கு உரிய உடல் மொழியில் இல்லாமல் இயல்பாக தோன்றுவது.. உறுத்தல்.
திருமண மோசடி மன்னனாக நடித்திருக்கும் நடிகர் பகவதி பாலா தனது கேரக்டரின் மூலம் மணப்பெண்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை பிரச்சார நெடியுடன் சொல்லி இருக்கிறார்.
நாயகி ஷிவானி உச்சக்கட்ட காட்சியில் தன் நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்.
இமான் அண்ணாச்சி- திருச்சி சாதனா ஜோடியின் இரட்டை அர்த்த நகைச்சுவை காட்சி சிலருக்கு ஆறுதல்.
மூத்த நடிகர் செந்தில் இரண்டொரு காட்சியில் தோன்றி ரசிகர்களிடம் தன் இருப்பை உறுதி செய்து கொள்கிறார்.

