இன்றைய தினம்(28), மட்டக்களப்பு நகரில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி, அதற்கு மாற்றாக அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கும் புதிய “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்திற்கு” எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாயக செயலணி அமைப்பின் இணைப்பாளர் செல்வகுமார் விடுத்த அழைப்பினைப் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்லடி பாலம் பகுதியில் ஒன்று கூடியனர். இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் சிறிநாத், சாணக்கியன், கோடீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி அமைப்பாளர் சுரேஸ், தமிழரசு கட்சி உறுப்பினர்கள், காணாமல் போனோரின் உறவுகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்றனர்.
“பயங்கரவாதத் தடைச் சட்டமும் வேண்டாம்; அரசை பாதுகாக்கும் புதிய சட்டமும் வேண்டாம்; நாட்டின் குற்றவியல் சட்டம் போதுமானது”, “பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற பெயரில் இழந்த உயிர்கள் போதாதா?”, “மக்களை ஒடுக்குகின்ற எந்த சட்டமும் வேண்டாம்” போன்ற பல்வேறு கோஷங்களுடன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஆரம்பமானது.
கல்லடி பாலத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், அரசடி வீதி சுற்றுவட்டம் வழியாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் முன்பாகச் சென்று, இறுதியாக காந்தி பூங்காவை சென்றடைந்தது. அங்கு தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடன், பின்னர் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம், நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள மற்றும் முன்மொழியப்பட்டுள்ள பாதுகாப்புச் சட்டங்களுக்கு எதிரான மக்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இடம்பெற்றது.


