யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளூர் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ரூபா 130 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான இடங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு உள்ளூர் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படவுள்ளதாகவும், அதனூடாக அந்நிய செலாவணியையும் ஈட்டவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்திற்கு சென்று அங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் ஆகியவற்றை பார்வையிட்டபின் அங்கு கிராம மட்ட அமைப்புக்களோடு உரையாடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மணல்காடு ஒல்லாந்தர் கால டச்சு தேவாலயத்திற்கு 4.2 மில்லியன் நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்ததுடன் மானிப்பாய் பிரதேசத்திலும் பல அழகான இடங்கள் புனரமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச சபையின் குடத்தனை வட்டார உறுப்பினர் அகஸ்டின், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கமல், பிரஜா சக்தி தலைவர், நிர்வாகிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

