சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு கத்தி குத்து-சந்தேகநபர்கள் கைது!

ஹிக்கடுவை பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் தாக்கி படுகாயப்படுத்தி, மோட்டார் சைக்கிளைக் கொள்ளையிட்ட சம்பவம் உட்பட பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹொரணை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்ட இரவுநேர சுற்றிவளைப்பின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணையின் போதே, பல கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய பாரிய கும்பல் குறித்து தகவல்கள் வெளியாகின.

இதனடிப்படையில் திப்பட்டுகொட, ஹொரணை, மொரகஹஹேன மற்றும் புலத்சிங்கள ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22, 33, 35 மற்றும் 36 வயதுடைய நால்வர் கைது செய்யப்பட்டனர். 

இவர்களில் கொள்ளையிடப்பட்ட பொருட்களைப் பாகங்களாகப் பிரித்து விற்பனை செய்த ஒருவரும் உள்ளடங்குகின்றார்.

ஹொரண நவம் மகா பெரஹர (ஊர்வலம்) தினத்தில், ஹிக்கடுவை பகுதியில் வைத்து சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை மன்னா கத்தியால் வெட்டி படுகாயப்படுத்திய இந்த கும்பல், அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றிருந்தது.

சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் கொள்ளையிடப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இதில் ஒரு மோட்டார் சைக்கிள் புலத்சிங்கள பகுதியில் பாகங்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அத்துடன் பல கைத்தொலைபேசிகளும் பணத்தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவர்கள் கொள்ளையிட்ட மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடுகளை மாற்றியமைத்து, ஹேனேகம, கஹதுடுவ, கும்புக மற்றும் கோனபல ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியான கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று  ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *