2021 ஆம் ஆண்டில் கன்னடத்தில் வெளியான ‘சீதாராம் பெனோய் கேஸ் நம்பர் 18 ‘எனும் படத்தின் விமர்சன ரீதியிலான வெற்றிக்குப் பிறகு, தற்போது அதன் இரண்டாம் பாகம் ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ எனும் பெயரில் வெளியாகி இருக்கிறது. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் முதல் பாகத்தை போன்ற திரில்லிங்கான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனேகட்டே எனும் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் சீதாராம் ( விஜய் ராகவேந்திரா) என்பவர் அதிகாரியாக பொறுப்பேற்கிறார். அவர் பொறுப்பேற்ற உடன் கொடூரமான கொலை சம்பவம் நடைபெறுகிறது. மூன்று கொலை சம்பவம் தொடர.. சீதாராம் புலன் விசாரணையை தீவிர படுத்துகிறார். உண்மையான குற்றவாளி யார்? இந்த தொடர் கொலைகளுக்கு பின்னணியில் உள்ள ரகசியம் என்ன? என்பதை ஆராய தொடங்குகிறார். அவருக்கு கிடைத்த விடை என்ன? என்பதுதான் இப்படத்தின் கதை.
பசுமையான மலைகளின் மத்தியில் நடைபெறும் ஒரு குற்ற சம்பவம் தொடர்பான வழக்கை இப்படம் ஆராய்கிறது. முதல் பாதி சுவாரசியமான காட்சிகளால் ரசிகர்களை ஈர்க்கிறது. குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் ஒருவர் தான் கொலையாளி என பார்வையாளர்களை நம்ப வைக்கும் வகையில் திரைக்கதை பயணிக்கிறது. ஆனால் அவர் குற்றவாளி அல்ல என்பதற்கான வலுவான பின்னணியை பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்காமல்.. மற்றொருவர் குற்றவாளி என திசை திருப்பி திரைக்கதை பயணிக்கிறது.
விசாரணையின் தீவிரம் மற்றும் ஆதாரங்கள் இன்னும் வலிமையாக இருந்திருந்தால்… இரண்டாம் பாதி கூடுதல் சுவராசியமாக இருந்திருக்கும். தமிழில் வெளியான சில படத்தின் நினைவுகள்- தாக்கங்கள்- வந்து செல்கிறது.
சீதாராம் எனும் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் விஜய் ராகவேந்திரா அற்புதமான உடல் மொழியாலும், உச்சரிப்பாலும் அந்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். ஆனால் எக்சன் காட்சியில் நிதானம் காட்டுவது…!?
செபஸ்டியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கோபாலகிருஷ்ணா தேஷ் பாண்டே தனித்துவமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். சீதா ராமின் தங்கையாக நடித்திருக்கும் நடிகை உஷா பண்டாரியின் பங்களிப்பும் நிறைவு.
இது போன்ற திரில்லர் ஜேனரிலான கதைகளுக்கு ஹூ டன் இட்.. யார் செய்திருப்பார்கள்? என்ற பரபரப்பும் அது தொடர்பான வினாக்களும் தொடர்ந்து எழுப்பி பார்வையாளர்களை பரபரப்புடன், பதட்டத்துடனும் வைத்திருக்க வேண்டியது மரபு. ஆனால் இதில் இயக்குநர் பாதி கிணறு மட்டுமே தாண்டுகிறார்.
திரில்லர் திரைக்கதைக்கு உரித்தான ஒளிப்பதிவும், பின்னணி இசையும் சிறப்பாக அமைந்திருப்பதால் … ரசிகர்களை இருக்கையில் அமர வைக்கிறது.
அமைதியான நிலவியல் பின்னணி- அற்புதமான நடிப்பு – ஓரளவு எதிர்பாராத திருப்பங்களை கொண்ட திரைக்கதை. நான் லீனியர் பாணியிலான படத்தொகுப்பு- என பாராட்டத்தக்க பல அம்சங்கள் இருந்தாலும்… பார்வையாளர்களிடத்தில் எழும் பல வினாக்களுக்கு விடை இல்லை.
திரைக்கதையின் சுவாரசியத்திற்காக இடம்பெற்ற அச்சுதானந்தன்- காவியா- மஞ்சா – ஆகிய கதாபாத்திரங்கள் புதிரானது என்றாலும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப பயணிப்பதால் பதற்றத்தை ஏற்படுத்தவில்லை.
தயாரிப்பு : ப்ளையிங் எலிஃபென்ட்
வழங்குநர் : ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
நடிகர்கள் : விஜய் ராகவேந்திரா , கோபாலகிருஷ்ண தேஷ் பாண்டே , உஷா பண்டரி மற்றும் பலர்
இயக்கம் : தேவி பிரசாத் ஷெட்டி
மதிப்பீடு: 2.5/5

