நாட்டின் முன்னேற்றப் பயணத்திற்கு எதிர்க்கட்சியின் பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் தேவையற்ற அரசியல் பதற்றங்கள் மிகப்பெரிய தடையாக உள்ளன என கோப் குழுத் தலைவர் மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சியின் அரசியல் அணுகுமுறையை விமர்சித்தார்.
“பாராளுமன்றத்தில் சத்தமாகக் கூச்சலிட்டு அரசியல் நாடகம் ஆடும் சிலர், அதே நாளில் காலை பொல்தூவ சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்” என அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்த போதிலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது 14 பேர் மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சியின் இத்தகைய செயல்பாடுகள் நாட்டின் அபிவிருத்தி முயற்சிகளைத் தடுக்கின்றன என்றும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பொறுப்பான அரசியல் பண்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் டாக்டர் நிஷாந்த சமரவீர வலியுறுத்தினார்.

