அல்-குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கிவைப்பு!

மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இயங்கி வரும் அந்நூர் கல்வி நிறுவகத்தில் அல் – குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த ஹாபிழ்கள் மற்றும் 15,10,5 ஜுஸ்உகள் (அல்குர்ஆனின் சில பகுதிகள்) மனனம் செய்தவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அந்நூர் கல்வி நிலையத்தின் உப தலைவரும் பல் வைத்திய நிபுணருமான டொக்டர் எம்.ஐ.எம். ஹபீல்(Bds) ஷ தலைமையில் நேற்று(20) மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் நடைபெற்றது.
2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அந்நூர் கல்வி நிறுவகமானது ஆன்மீக லௌகீக கல்வியறிவை போதித்து வருவதுடன் அதன் ஒரு அங்கமாக 2018 ஆம் ஆண்டு தொடக்கம் பகுதி நேர அல்குர்ஆன் மனனப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்நூர் கல்வி நிலையத்தின் முதலாவது ஹாபிழ் என்ற மகுடம் சூடிய மாணவன் அல்ஹாபிழ் எம்.எச். ஹம்தான் 2025 ஆம் ஆண்டு நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி துவிச்சக்கர வண்டி பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதன்போது இம் மாணவனின் பெற்றோரும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.
இரண்டாம் தடவையாக இன்று அந்நூர் கல்வி நிலையத்தின் இரண்டாவது, மூன்றாவது ஹாபிழ்கள் என்ற மகுடம் சூடிய நிஹால் மொஹமட் தக்கிய சாலிஹ், அய்யுப்கான் அஹ்மத் அம்ஹர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் இவர்களின் பெற்றோர்களும் இங்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.
இதேவேளை 15 ஜூஸ்உகளை மனனம் செய்து கொண்ட மாணவன் மொஹமட் புழையில் அப்துரஹ்மான், 10 ஜூஸ்உகளை மனனம் செய்த மாணவன் அஹ்மத் அஸீம் பிலால், 05 ஜூஸ்உகளை மனனம் செய்த மாணவர்களாக யஹ்சர் அபான் டிஸ்னித் முஹம்மத், முஹம்மத் சபீக் யஹ்யா அக்தீஸ், முஹம்மத் வக்கீல் அஹ்மத் சயான் ஆகியோரும் இங்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வின் மஸ்ஜிதுல் கபீர் பெரிய ஜும்மா பள்ளிவாசலின் பேஷ் இமாம் அஷ்- ஷெய்க் ஏ.ஆர் பைஸல் கியாஸ் (பலாஹி), அந்-நூர் கல்வி நிர்வாகத்தின் உஸ்தாத் மார்களான அல்-ஹாபிழ் எம்.எச்.எம். றாயிஸ் (ஷர்க்கி), அல்- ஆலிம் எம்.ஐ.எம். நுஸ்கி (ஸாபிதி), அல்-ஹாபிழ் எம்.எல்.எம். உஸ்மான் (நூரி), அல்-ஹாபிழ் எம்.எஸ். பஹீம் அஹ்மத் (ஹாஷிமி), மற்றும் ஊரின் உலமாக்கள், கபீர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினர், மரைக்கார் மார், பொதுமக்கள், நலன் விரும்பிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மாணவர்களை வழிப்படுத்தி அல்-குர்ஆனை போதித்து வரும் உஸ்தாத் மார்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *