இளைய தலைமுறையினரிடத்தில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகம் என்பதால்.. அவர்களின் கவனத்தைக் கவரும் வகையில் சப்ஸ்கிரைப்- ஷேர் ஆகியவற்றை தலைப்பில் இடம் பெற வைத்து வெளியாகி இருக்கும் ‘லவ் சஸ்கிரைப் ஷேர் ‘எனும் திரைப்படம் – ரசிகர்களுக்கு உண்மையில் நல்லதொரு அனுபவத்தை வழங்கியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த படவா கோபி – வினோதினி வைத்தியநாதன் தம்பதிகளின் மூத்த மகன் சிவா (ஆதவ் கிருஷ்ணா) கல்லூரியில் உயர் கல்வி படித்து கொண்டிருக்கிறான். இந்தக் காலத்து இளைஞர்களுக்கு உரிய எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் தந்தை கர்வம் கொள்ளும் அளவிற்கு முன்னுதாரண இளைஞராக இருக்கிறார்.
இவருடைய இந்த அம்சத்தை ஒரு சம்பவத்தில் எதிர்கொண்ட அதே கல்லூரியில் உயர்கல்வி கற்கும் பூஜா ( சிம்ரன் அத்வானி) எனும் பெண் காதலிக்க தொடங்குகிறார். பூஜாவின் தந்தை வட இந்திய பின்னணியைக் கொண்ட தொழிலதிபர் மணிப்பால் . இவர் பூஜா காதலிக்கும் சிவா நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார்.
இந்தத் தருணத்தில் சிறிய வயதில் தந்தையை விட்டு பிரிந்து வட இந்தியாவில் புனித நகரான காசியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் தாயை நேரில் சந்தித்து காதலுக்கு ஆதரவும், ஆசியும் பெற திட்டமிடுகிறார் பூஜா. இதற்காக தந்தைக்குத் தெரியாமல் பாட்டியிடம் மட்டும் சொல்லி விட்டு சென்னையில் இருந்து காசிக்கு தன் காதலன் சிவா உடன் செல்கிறார் பூஜா.
தன் தாயை தனியாக சந்தித்து விட்டு வருகிறேன் என சிவாவிடம் சொல்லிவிட்டு, தாயை சந்திப்பதற்காக செல்கிறார் பூஜா. அதன் பிறகு பூஜா காணாமல் போகிறார். அவருக்கு என்ன நடந்தது? பூஜாவும் சிவாவும் இணைந்தார்களா ?இல்லையா ? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
முதல் பாதி திரைக்கதை முழுவதும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பயணிப்பதால் கொட்டாவி வந்து கொண்டே இருக்கிறது. இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். அது சில இடங்களில் மட்டுமே ஒர்க் அவுட் ஆகிறது. சில இடங்களில் எழுத்தில் இருக்கும் வலிமை திரை மொழியாக மாற்றப்பட்டு ரசிகர்களுக்கு கடத்துவதில் வலு இல்லாததால் இயல்பாய் கடந்து செல்கிறது.
காசியில் தன் காதலியை ஒரு கும்பல் கடத்தி வைத்திருக்க கூடும் என்ற கோணத்திலான நாயகனின் துரத்தல் காட்சி வழவழ..இழுவை.
‘அத்தைக்கு புருஷன் வேல..’, மைன்ட் வாய்ஸ் வில்லத்தனம்… என சில இடங்களில் சின்ன சிரிப்பும் ஆஜர்.
சிவா கதாபாத்திரத்தை நல்லவன் என்று மட்டும் காட்சிப்படுத்தாமல்.. ரொம்ப ரொம்ப நல்லவன் என காட்சிப்படுத்தி.. படம் பார்க்கும் ரசிகைகளை பொறாமை பட வைத்திருக்கிறார் இயக்குநர். இதை உணர்ந்து அப்பாவியான அக்மார்க் அர்கானிக்கான வெர்ஜின் பையன் எனும் கேரக்டரை உணர்ந்து.. முடிந்த வரை நன்றாக நடிக்க முயற்சி மட்டும் செய்திருக்கிறார் புதுமுக நடிகர் ஆதவ் கிருஷ்ணா.
பூஜா கோத்தாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதுமுக நடிகை சிம்ரன் அத்வானி- திரையில் ஒவ்வொரு கமெரா கோணத்தில் வெவ்வேறாக தோன்றுவது பலம்- பலவீனம். ஒப்பனை – ஆடை வடிவமைப்பு இரண்டும் படு சொதப்பல். ஆனால் முன் வரிசை ரசிகர்களை கவரும் வகையிலும்… டிஜிட்டல் தள ரசிகர்களை கவரும் வகையிலும் பல காட்சிகளில் துண்டுடன் தோன்றுவது.. கோன் ஐஸ்கிரீம்.
ஜாவா சுந்தரேசன் – படவா கோபி – வினோதினி வைத்தியநாதன் – ஆகியோர் இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
‘ தீஞ்சுடரே…’, ‘மழை அடிக்குது..’ ஆகிய பாடல்கள் இதம். பின்னணி இசை காட்சிகளை மேம்படுத்தவில்லை என்றாலும் … பரவாயில்லை என சொல்ல வைக்கிறது.
காசி தொடர்பான காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் உழைப்பை பாராட்டலாம்.
உச்சகட்ட காட்சி… இயக்குநரிடம் தொகுக்கப்படாத- ஒருங்கிணைக்கப்படாத – திறமை இருக்கிறது என்பதை பறைசாற்றுகிறது.
பார்வையாளர்களின் உளவியலை துல்லியமாக அவதானித்து தன்வயப்படுத்தி.. அதற்கேற்ப திரை மொழி மேஜிக்கை நிகழ்த்தியிருந்தால்.. இது வெற்றிப்படம்.
தயாரிப்பு : ஜெ பி ஃபிலிம்ஸ்
நடிகர்கள் : ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன் அத்வானி, படவா கோபி, வினோதினி வைத்தியநாதன், ஜாவா சுந்தரேசன், ரோஹித் மற்றும் பலர்.
இயக்கம் : ஆர். மகாலட்சுமி முருகன்
மதிப்பீடு : 2.5/5

