தொடர் மழையினால் அம்பாறை மாவட்ட வீதிகளில் வெள்ளப்பெருக்கு!

அம்பாறை மாவட்டத்தில் தொடர் அடை மழை காரணமாக மீண்டும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது .
மேலும் பல்வேறு இடங்களில் அடை மழை காரணமாக மரங்கள் உடைந்துள்ளதுடன் பலத்த காற்று காரணமாக சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அட்டாளைச்சேனை, தைக்கா நகர் , அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை, நாவிதன்வெளி, மருதமுனை, பெரிய நீலாவணை, மல்வத்தை போன்ற பிரதேசங்களும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத் திட்டங்களும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் மேற்குறித்த பகுதியில் பெய்த கனமழை மற்றும் கடும் காற்று அழுத்தத்தால் பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகள் பலவும் நீரில் மூழ்கி வருகின்றன.மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்நிலப் பிரதேசங்கள், வீடுகள், வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கக் கூடிய அபாயமும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன் பிரதான வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதுடன் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *