‘கே ஜி எஃப் ‘படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் பான் இந்திய நட்சத்திர நடிகரான யாஷ் அதிரடியான எக்சன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ டாக்சிக் :பெரியவர்களுக்கான ஒரு தேவதை கதை’ எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டாக்சிக் : பெரியவர்களுக்கான ஒரு தேவதை கதை’ எனும் திரைப்படத்தில் யாஷ், க்யாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.
பீரியாடிக் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைன்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாகவும், ஆங்கில மொழியில் சர்வதேச திரைப்படமாகவும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருகிறது.
இதில் நாயக பிம்பத்தின் கட்டமைப்பு பிரமாண்டமானதாகவும், பிரமிக்கத்தக்கதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதால் எக்சன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதனால் இந்த கிளர்வோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பல மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

