சொத்துகளின் சட்டபூர்வமான ஆதாரத்தை விளக்க முடியாத வகையில் சொத்துகள் குவித்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சுச் செயலாளர் அனுஷ பெல்பிட்டா பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ்.பொடறகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகள் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். சந்தேகநபரின் பங்குச் சந்தை முதலீடுகள் தொடர்பாக பகுப்பாய்வு அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைக்காக புதிய தேதியொன்று வழங்குமாறும் கோரினர்.
பெல்பிட்டா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி காஞ்சனா ரத்வத்தே, சந்தேகநபர் ஒரு மாத காலமாக விளக்கமறியலில் உள்ளதாகவும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். பொருத்தமான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்குமாறும் கோரினார்.
இரு தரப்புகளின் வாதங்களையும் பரிசீலித்த தலைமை நீதவான், தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க தேவையில்லை எனக் குறிப்பிட்டு, தலா ரூ. 50 இலட்சம் மதிப்பிலான இரண்டு சரணப் பிணையில் அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.
மேலும், வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டதுடன், பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் மே 29ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

