பேத்தாழை பொது நூலகத்தின் பௌர்ணமி கலை, இலக்கிய ஒன்றுகூடல்!

இலங்கையின் பொது நூலக வரலாற்றில் வேறெங்கும் இல்லாதவாறு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற தரம்-2 நூலகமான பேத்தாழை பொது நூலகம் இலங்கையில் டிஜிட்டல் நூலக சேவைகளையும் பல்வேறு பணிகளையும் முன்னெடுத்து வருகின்றது.

அவ்வகையில், உலகத்தமிழ் எழுத்தாளர்கள் முதல் உள்ளுர் எழுத்தாளர்களது படைப்புக்களையும், எழுத்தாளர்களையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து, பல்வேறு கலை, இலக்கிய நிகழ்வுகளுடன் கூடிய “பௌர்ணமி கலை, இலக்கிய நிகழ்வான “நிலா முற்றம்” நிகழ்வினை நடத்தி வருகின்றது.

இம்மாதம்- “நிலா முற்ற”த்தில் 60ஆவது நிகழ்வு அரங்கேறியது! ஐந்தாண்டு நிறைவு நிலா முற்ற நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கலை, இலக்கிய நிகழ்வுகளுடன் கடந்த 59 நிலா முற்றங்களிலும் பங்குபற்றிய இலக்கிய ஆர்வலர்களை, நிலா முற்றக் குழுவினருக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி பாராட்டுதல் மற்றும் பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்ற 50ஆவது நிலா முற்றத்தில் கலந்து கொண்டிருந்த அப்போது மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளராக கடமையாற்றிய திரு.சூ.பார்த்திபன் அவர்கள்! “நிலாமுற்ற” நிகழ்வின் சிறப்பினை உணர்ந்து அதனை இன்னும் சிறப்பாக நடத்துவதற்கான மேடை மற்றும் சவுண்ட் கருவிகளை பெற்றுத்தருவதாக வாக்களித்திருந்தார். கூறியது போலவே உடனடியாக செயற்பட்டு, அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். 60ஆவது நிலா முற்றத்திற்கு முன்னதாகவே பிரமாண்டமான மேடைக்குரிய உபகரணங்கள் மற்றும் பெரிய ஜெனரேட்டர் வசதியுடன் கூடிய பெறுமதி வாய்ந்த சவுண்ட் சிஸ்டம் போன்றவை நூலகத்திற்கு கி்டைக்கப்பெற்றுள்ளன. இதற்காக கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் திரு.எஸ்.ராஜ்கீதன்  மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்தார்.

எனவே, அறுபதாவது நிலா முற்றம் – நன்றிபாராட்டும் நிகழ்வாகவும் அமையப் பெற்றது. தற்பொழுது பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றும் திரு.சூ.பார்த்திபன் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவருடன் பிரதேச சபையின் செயலாளர் திரு.எஸ்.ராஜ்கீதன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப்.அப்துல்லா ஹாரூன், பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திரு.ந.நிமல்ராஜ், வாழைச்சேனை ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய விரிவுரையாளரான திருமதி. விஜிதா முருகவேள், பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலய அதிபர் திரு.க.கதிர்காமநாதன், வாழைச்சேனை இந்து கனிஷ்ட வித்தியாலய அதிபர் திருமதி. ஸோபா ஜெயரஞ்சித் ஆகியோருடன் பிரான்ஸில் வெளியாகும் “எக்ஸில்” கலை, இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர்களுள் ஒருவரும், பிரபல இலக்கிய செயற்பாட்டாளுருமான திருமதி. விஜி மற்றும் கோறளைப்பற்று பிரதேசத்தினைச் சேர்ந்த மூத்த, இளைய தலைமுறை எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கலைஞர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.

வழமையாக நூலக முற்றத்தில் நடைபெற்று வந்த நிலா முற்றம்! மழை காரணமாக நூலகக் கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது. அதிதிகளை வரவேற்றலுடன் தொடங்கிய நிகழ்வினில் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலும், சுவாமி விபுலானந்தரின் திருவருவப் படத்திற்கு மலர் மரியாதையும் செலுத்தப்பட்டது. அண்மையில் மறைந்த பேத்தாழை விபுலானந்தர் வாசகர் வட்ட உறுப்பினரும் பல்துறை ஆளுமையுமான அமரர். மனோவா சேர்த்து, உயிர்நீத்த கலைஞர்களுக்கான மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து! நூலகப் பொறுப்பாளர் திருமதி. புஸ்பா தயாளன்  தலைமையுரையும் வரவேற்புரையும் நடைபெற்றது. நிகழ்வுகளை விபுலானந்தர் வாசகர் வட்டத்தின் உறுப்பினர்களும், நிலா முற்ற விழாக்குழுவினரும் தொகுத்து வழங்கினர். இவ்விழாவில் கவிஞர். யேசுசகாயம் குழுவினரின் நடனங்கள் அரங்கேறி அவையோரை மகிழ்வித்தன.

“நிலாமுற்றத்தின்” தோற்றம் வளர்ச்சி குறித்தும் – ஐந்தாண்டு நிறைவின் போது நிலா முற்ற நிகழ்வினை நடத்துவதற்காக பெறுமதி வாய்ந்த மேடை, சவுண்ட் கருவிகளை பெற்றுத் தந்துள்ள முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.சூ.பார்த்திபன்  நன்றி தெரிவித்து, “நிலா முற்ற” நிகழ்வின் ஸ்தாபகரும் பேத்தாழை பொது நூலகத்தின் முன்னாள் பொறுப்பாளருமான திரு.மரகதம் பிரகாஸ்  உரையாற்றினார்.

இலங்கை பொது நூலக வரலாற்றில் பேத்தாழை பொது நூலகத்தின் முக்கியத்துவம் குறித்தும், பேத்தாழை பொது நூலகத்தினால் தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப்.அப்துல்லா ஹாரூன்  உரையாற்றினார்.

பேத்தாழை பொதுநூலகத்தின் நவீன தொழினுட்ப செயற்பாடுகளுக்கு வித்திட்டு, நூலகத்தினை டிஜிட்டல் நூலகமாக ஒன்லைன் சேவைகளை ஆரம்பிப்பதற்கு பக்கபலமாக விளங்கியதுடன், ஆரம்ப காலத்தில் பல வருடங்களாக தனிப்பட்ட ரீதியாகவும் மிகுந்த ஆர்வத்துடன் பேத்தாழை பொது நூலகத்தில் கொஹா மென்பொருளை நிறுவி அதனை நூலகத்திற்கேற்றவாறு செம்மைப்படுத்தியதுடன், நூலகத்திற்கான இணையத்தள உருவாக்கத்திலும் உதவி புரிந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவி நூலகரும் நூலகத்தின் நலன்விரும்பியுமான திரு.என்.ரவிக்குமார்  வீடியோ மூலமான வாழ்த்துச் செய்தியும் இடம்பெற்றது.

கடந்த வருடம் தேசிய ரீதியில் அதிக விருதுகளைப் பெற்றுக் கொண்ட பிரதேச சபையாக விளங்குவதுடன், தேசிய ரீதியில் பிரதேச சபை மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட பேத்தாழை பொது நூலகத்தின் நிலா முற்றத்தின் சிறப்பினையும் இந்த நிலாமுற்றத்தின் மூலம் நூலகத்திற்கும் பிரதேசத்திற்கும் கிடைத்துள்ள பெறுமதி வாய்ந்த மேடையுடன் கூடிய சவுண்ட் உபகரணங்களைப் பெற்றுத்தந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் உள்ளுராட்சி உதவி ஆணையாளரும், தற்போது பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராகப் பணிபுரிகின்றவருமான திரு.சூ.பார்த்திபன்  தனது நன்றிகளையும் தெரிவித்து பிரதேச சபையின் செயலாளர் திரு.எஸ்.ராஜ்கீதன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

கல்குடா வலயத்தில் தமிழ் பாட ஆசிரிய ஆலோசகராக பணிபுரிகின்ற பிரபல தமிழ் பாட ஆசிரியரும், கவிஞருமான எ.த.ஜெயரஞ்சித் 60 நிலா முற்றங்களை வாழ்த்தி,  60 வரிகளில் கவிமாலை ஒன்றினைச் சமர்ப்பித்தார். பேத்தாழை வீரையடி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் சுளகு நடனம் பார்ப்போரையும் கேட்போரையும் கவர்ந்தது. சிறுமி ஒருவரின் சினிமா பாடல்களுக்கான நடனம் இளையவர்களின் கைதட்டல்களைப் பெற்றது.

இலக்கியச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான விஜி அவர்கள் “பேத்தாழை பொது நூலகத்தின் ஆரம்ப காலம் முதலான செயற்பாடுகள் பற்றியும் அவற்றில் தலையாக விளங்கும் நிலா முற்றத்தின் சிறப்பு பற்றியும் – எழுத்தாளர்களையும் வாசகர்களையும் ஒன்றிணைக்கும் இந்நிகழ்வின் முக்கியத்துவம் குறித்தும் பாராட்டிப் பேசினார். தான் இந்நிகழ்வில் கலந்து கொண்டமையினையிட்டு பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.

பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திரு.சூ.பார்த்திபன் சிறப்புரை நிகழ்த்தினார். மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளுடன், பல்வேறு இலக்கிய அம்சங்களுடன் அவரது உரை அமைந்திருந்தது. பேத்தாழை பொது நூலகத்தின் 50ஆவது நிலா முற்றத்தின் பார்வையாளராக கலந்து கொண்ட தன்னை 60ஆவது நிலா முற்றத்தில் பிரதம அதிதியாக கலந்து கொள்ள வாய்ப்பினை வழங்கிய இயற்கையையும் இறைவனையும் நன்றி கூர்ந்தார். தொடர்ந்து முன்னேற்றகரமான பணிகளை முன்னெடுத்து வருகின்ற பேத்தாழை பொதுநூலகத்தினையும் அவற்றினை வழிநடத்தி வருகின்ற செயலாளர், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் குறிப்பாக பேத்தாழை பொது நூலகத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் வளர்ச்சியிலும் உறுதுணையாக விளங்கி வருகின்ற “விபுலானந்தர் வாசகர் வட்ட உறுப்பினர்களையும் பாராட்டினார். நிலா முற்றம் இன்னும் வளர்ந்து – பல சாதனைகளைச் செய்ய வேண்டும் எனவும், இதனை விட பெரியதொரு உதவியினை – பணியினை நிலா முற்றத்திற்கு செய்கின்ற வாய்ப்பினை இறைவன் தனக்கு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

விழாவில் கட்டம் கட்டமாக 59 நிலா முற்ற அரங்கினை அலங்கரித்த உரையாளர்களுக்கான நினைவுச் சின்னங்கள் அதிதிகளின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதம அதிதிக்கு பிரதேச சபையின் சார்பாகவும் பேத்தாழை பொது நூலகம் சார்பாகவும் நன்றி பாராட்டி வாழ்த்து மடல் ஒன்றும் வாசிக்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.

நிலா முற்ற உரையாளர்களுடன்! பேத்தாழை பொதுநூலகத்திற்கு பக்கபலமாக விளங்கும் கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருக்கும் பிரதம அதிதியின் கரங்களால் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இறுதியாக, 60ஆவது நிலா முற்றம் வரை – இந்தச் சாதனைப் பயணத்தில் கரம்கோர்த்து நடந்த அனைவருக்கும் நன்றி கூறும் நிகழ்வு இடம்பெற்றது. பேத்தாழை விபுலானந்தர் வாசகர் வட்டம், விபுலானந்தர் கலை, இலக்கிய மன்றம் சார்பில் திருமதி. ஸோபா ஜெயரஞ்சித் அதிபர்  நன்றியுரையினை நிகழ்த்தினார்.

60ஆவது நிலா முற்ற நிகழ்வினை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு திரு. லலித்குமார் மற்றும் திரு.க.யுவராஜன் ஆகியோர் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *