கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் தாஹிர் தலைமையில் ஓட்டமாவடி ரிவர் பார்க்கில் இடம்பெற்ற மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிகளில் கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழக அணியும் காவத்தமுனை மில்லத் விளையாட்டுக்கழக அணியும் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்து பணப்பரிசினையும் தட்டிச்சென்றனர்.
கடந்த 05ம் திகதி ஆரம்பமான மேற்படி மின்னொளி கரப்பந்தாட்டப்போட்டியில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 10 விளையாட்டுக்கழகங்களிலிருந்து 40 வயதுக்கு கீழ்ப்பட்ட மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், முதலாவது நாள் 02 குழுப்போட்டிகளும் இரண்டாவது நாள் 02 இடைவிலகல் போட்டிகளும் மூன்றாவது நாள் 02 கால் இறுதிப் போட்டிகளும் நான்காவது நாள் 03 அரையிறுதி போட்டிகளும் இடம்பெற்றுள்ளது.
அதன் தொடரில், நேற்று(13) ஐந்தாவது நாள் இறுதிப்போட்டிகள் 40 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 40 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான என இரு போட்டிகள் இடம்பெற்றது.
இதில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழக அணியும் ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக்கழக அணியும் பங்கேற்றதுடன், 40 வயதுக்கு கீழ்ப்பட்டோருக்கான போட்டியில் காவத்தமுனை மில்லத் விளையாட்டுக்கழக அணியும் மற்றும் கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழக அணியும் பங்கேற்றது.
அந்தவகையில், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழக அணியும் 40 வயதுக்கு கீழ்ப்பட்டோருக்கான போட்டியில் காவத்தமுனை மில்லத் விளையாட்டுக்கழக அணியும் வெற்றி பெற்று சம்பியனானதுடன், சம்பியனான அணிகளுக்கு வெற்றிக்கிண்ணமும் 30,000 பணப்பரிசும் மற்றும் இரண்டாமிடங்களைப்பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணமும் 20,000 ரூபா பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் தாஹிர் தலைமையில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஹலால்தீன் பங்குபற்றுதலுடன் சிரேஷ்ட வீரர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற போட்டித்தொடரிலும் இறுதிப்போட்டிகளிலும் வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஜருள், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் பாறுக், ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் றியாஸ், கலாசார உத்தியோகத்தர் பீர்முஹம்மது காஸிமி, ஓட்டமாவடி இளைஞர் தொழிற்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி ஹனீபா, ஐஸ் நிறுவன உரிமையாளர் சமூக செயற்பாட்டாளர் அஸீஸ், அகீல் எமேர்ஜென்ஸியின் பணிப்பாளர் சமூக செயற்பாட்டாளர் நியாஸ்தீன் ஹாஜியார் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழக நிருவாகிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரதேசத்தின் சிரேஷ்ட வீரர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
போட்டித்தொடர் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற உதவி, ஒத்தாசை வழங்கிய தவிசாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், அலுவலக உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழக அணிகள், வீரர்கள், சிரேஷ்ட வீரர்கள், நடுவர்கள் அனைவருக்கும் பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் நன்றி தெரிவித்தார்.

