மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை நகரிலும் அருகிலுள்ள கிராமப்பகுதியிலும் இன்று(13) அதிகாலை ஏற்பட்ட காட்டுயானை ஊடுருவல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 6 மணியளவில் இரண்டு காட்டுயானைகள் நகரமும் கிராமப்பகுதியும் நோக்கி நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வாழைச்சேனை நகரப்பகுதியில் இடியப்பம் விற்பனை செய்து கொண்டிருந்த 68 வயதுடைய மூதாட்டி ஒருவரை காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
இதனுடன் தொடர்பாக, கிராமப்பகுதிக்குள் நுழைந்த காட்டுயானைகள் மேற்கொண்ட தாக்குதலில் மொத்தமாக நால்வர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து வனவிலங்கு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து குறித்த காட்டுயானைகளை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பாடசாலை மாணவர்கள் பெற்றோருடன் வீடுகளுக்கு அனுப்பப்பட்டதுடன், பாடசாலைக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

