மாயச் சித்திரம் வரைதல் நிகழ்வு!

மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் 30ஆம் ஆண்டு நிறைவு மகிழ்வின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, “மாயச் சித்திரம் வரைதல் (Mystery Painting)” எனும் சிறப்பு நிகழ்வு நாளை (11) மாலை 03.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

உளவியல் குணப்படுத்தல், உடலியக்கத் திறன் விருத்தி மற்றும் சிந்தனாசக்தி மேம்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அழகியலால் உள்ளத்தைப் பண்படுத்தும் கலைச் செயற்பாடாக இந்த மாயச் சித்திரம் வரைதல் நிகழ்வு அமைந்துள்ளது.

சிறுவர்கள் முதல் வளர்ந்தோர் வரை அனைவரின் பங்களிப்புடனும் இந்தச் சித்திரம் வரையப்படவுள்ளது.இந்த நிகழ்வு, வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் செயல் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் தலைமையில், மட்டக்களப்பு பயனியர் வீதியில் அமைந்துள்ள மாவட்டக் கூட்டுறவுச் சங்கக் கட்டிடத்தின் முகப்புச் சுவரில் (அரசடி புதிய பயனியர் வைத்தியசாலைக்கு அருகில்) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “பிள்ளைகளின் ஆனந்தத்தில் மகிழ்வோம்… சமாதானத்தை விதைப்போம்…” எனும் கருப்பொருளின் கீழ், அடுத்த தலைமுறைக்கான அமைதியான வாழ்வை கட்டியெழுப்பும் நோக்கில், “மகிழ்வான குடும்பம்” என்ற தலைப்பில் வீடுகளிலும் மாயச் சித்திரம் வரையும் செயற்பாட்டை முன்னெடுக்க வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவினர் ஆயத்தமாகியுள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பங்களிப்புடனும் வீட்டு ஒரு சுவரில் இந்தச் சித்திரத்தை வரைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளில் ஆர்வமுடைய அனைவரும் இணைந்துகொள்ளுமாறு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.
தொடர்புகளுக்கு:
📞 Butterfly Peace Garden Hot Line – 077 559 9422
📧 Email – butterflypeacegardenbatticaloa@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *