மட்டக்களப்பு வேத்துச்சேனை பிரதான வீதி உடைந்து விபத்து!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனை கிராமத்தின் பிரதான வீதியில் அமையப்பெற்ற கல்வெட்டு  06.02.2026 ஆம் திகதி காலை உழவு இயந்திரம் பயணித்த போது திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது.

தற்போது இப்பகுதியில் வேளான்மை (நெல்) அறுவடைக்காலம் என்பதால், இவ்விபத்து விவசாயிகளையும் பொதுமக்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இப்பகுதியில் தற்போது பெரும்போக அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை எடுத்துச் செல்லவும், இயந்திரங்களை வயல்களுக்குக் கொண்டு செல்லவும் இந்த வீதியே பிரதான வீதியாகும்.

வீதியின் கல்வெட்டு  உடைந்திருப்பதால் அறுவடைப் பணிகளில் பாரிய முடக்கம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.தவிசாளரின் துரித நடவடிக்கை…

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திரு. வி. மதிமேனன் உப தவிசாளர் த.கயசீலன் பிரதேசசபையின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபையின் தொழிநுட்ப உத்தியோகஸ்தர்கள்  சென்று சேதமடைந்த வீதியினைப் பார்வையிட்டார்.

விவசாயிகளின் நலன் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியப் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டு,  பிரதேசசபை ஊழியர்கள்,பொதுமக்களின்  ஒத்துழைப்புடன் வீதியைத் தற்காலிகமாகச் சீர்செய்யும் பணிகள் இடம்பெற்றன.

கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், இவ்வீதியின் அபாயகரமான நிலை குறித்து தவிசாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே,கடந்த [06]அறுவடைக் காலத்தில் மக்கள் இவ்வாறான நெருக்கடியைச் சந்தித்துள்ளனர் என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேத்துச்சேனை கிராம மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் மற்றும் அன்றாடத் தேவைகள் முடங்குவதைத் தவிர்க்க, இந்த வீதியை நிரந்தரமாகப் புனரமைக்க மாவட்ட மட்ட அதிகாரிகள் நிதி ஒதுக்கீடு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *