அவசரகாலச் சட்டம் அடக்குமுறைக்கான கருவியாகப் பயன்படுத்தப்படாது!

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்முறையில் சாதாரண சட்டங்கள் மட்டும் போதுமானதாக இல்லை எனவும், அதற்காக விசேட சட்டங்கள் அவசியம் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (06) பிற்பகல் நியங்கொட பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
விசேட சட்டங்களை இயற்றுவதற்கான தேவையான அதிகாரங்களை அரசியலமைப்பு வழங்குகிறது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம் இவ்வாறான சிறப்புச் சட்டங்களை அமல்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்றும் குறிப்பிட்டார்.
“சிறப்பு அதிகாரங்களுடன் கூடிய சட்டங்கள் தேவை. அதனால்தான் அவசரகாலச் சட்டத்தை விதித்தோம்.
ஆனால் வரலாற்றில், அவசரகாலச் சட்டங்கள் பெரும்பாலும் தொழிற்சங்க இயக்கங்களை பலவீனப்படுத்தவும், ஊடகங்களை அடக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அந்த நோக்கத்திற்காக நாங்கள் அவசரகாலச் சட்டங்களை பயன்படுத்தவில்லை,” என அவர் தெளிவுபடுத்தினார்.
நாட்டை மீளக் கட்டியெழுப்பும் செயல்முறை இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், அடிப்படை பணிகள் முடியும் வரை அவசரகாலச் சட்டம் அமுலில் தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“அவசரகாலச் சட்டம் ஒருபோதும் அடக்குமுறைக்கான கருவியாகப் பயன்படுத்தப்படாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்,” என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும்,
=கொள்வனவு செயல்முறைகளை விரைவுபடுத்த
=நியாயமான விலைக்கு வாங்குதலை எளிதாக்க
=காணி கையகப்படுத்தல் நடவடிக்கைகளை துரிதப்படுத்த
=அரச அதிகாரிகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க
அவசரகாலச் சட்டத்தை மீண்டும் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மிக விரைவாக மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பகுதிகளுக்கு தேவையான சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
“நமது நாடு வீழ்ச்சியடைய வேண்டும் என்று விரும்பும் ஒரு குழு உள்ளது.
ஆனால், எந்தவொரு பேரழிவையும், எந்தவொரு சரிவையும் தாங்கக்கூடிய நாடாக இந்த நாட்டை நாம் உருவாக்குகிறோம்.
ஒரு பேரழிவை எதிர்கொள்ள நாம் ஒன்றுபட வேண்டும்.
நாம் தனியாக நின்றால் பலவீனமாகிறோம்.
நாம் ஒன்றுபட்டால் பலமடைவோம்,” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *