இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா தமிழ்நாட்டில் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோகிராம் கஞ்சா, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் கியூ பிரிவு பொலிஸார், இலங்கைக்கு கடத்தவிருந்த 194 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை வீதி (ECR) சந்திப்பில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கிடைத்த தகவலின் அடிப்படையில் கார் ஒன்றை வழிமறித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனபோது காரைச் சோதனையிட்டதில், 97 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 194 கிலோ கஞ்சாவைக் கண்டறிந்தனர்.

கடத்தல் பொருட்களைப் பறிமுதல் செய்த பொலிஸார், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த 40 வயதான சாரதியை கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், குறித்த கஞ்சா சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்டதும், சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

கியூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ராமநாதபுரம் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய ஏனையோர் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *