சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை (Law and Society Trust )𝐋𝐒𝐓 நிறுவனத்தின் ஏற்பாட்டில், பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் முன்மொழியப்பட்ட PSTA சட்டவரைபு பற்றிய கலந்துரையாடலானது, இன்றைய தினம் (01) மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் வளவாளராக சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் கலந்து சிறப்பித்தார். கலந்துரையாடலில் பல்கலைக்கழக மாணவர்களும் ஊடகவியலாளர்களும் பங்கு பற்றினர்.

சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் கூறுகையில்,
தமிழ் பேசும் மக்களுடைய உரிமைகளை மறுக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் சட்டங்களான பயங்கரவாத தடை சட்டம் (PTA) மற்றும் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபு (PSTA) அமைந்துள்ளது.
இச்சட்டங்கள் உருவாக்கப்பட்ட நோக்கம், அதன் பின்னணிகள் பற்றியும் பேசப்பட்டிருந்தது.
அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன் PTA சட்டத்தை இல்லாது ஒழிப்போம் என வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், தற்பொழுது அதனை மீறி PTA சட்டத்தினை வேறொரு விதமாக அதாவது PSTA ஆக உருவாக்கியமை அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கேள்விகள் எழுப்பும் விதமாகவே இடம்பெற்றுள்ளது.
PSTA இன் ஆபத்துக்கள் பற்றியும் தமிழ் பேசும் மக்களுடைய ஜனநாயக உரிமையை மீறும் விதமாகவும் இந்த சட்டமானது கொண்டு வரப்பட்டுள்ளது என்ற தகவலும் கலந்துரையாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்திற்கு இந்த PSTA சட்டம் தொடர்பாக அழுத்தத்தை கொடுக்கும் விதமாக அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்யலாம் என்பது பற்றியும் PSTA சட்டம் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான பொறுப்பு ஊடகங்களுக்கும், சட்டத்தரணிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் மாணவர்களுக்கும், மதத் தலைவர்களுக்கும் இருக்கிறது.
இவ்வாறான சிறுபான்மையினரை ஒடுக்கும் சட்டங்களை எமது வடக்கு கிழக்கிலிருந்து தெளிவாக சவாலுக்கு உட்படுத்த வேண்டும் என அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
– லுக்சிகா விமலாதித்தன் –

