மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதியில் நேற்றிரவு (23) இடம்பெற்ற வாகன விபத்தில், இரண்டு வாலிபர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
மூன்று இளைஞர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் எதிரேவந்த சிறிய லொறி ரக வாகனத்துடன் மோதியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார். ஏனைய இருவரையும் ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்வழியில் ஒருவர் மரணமடைந்ததாகவும், மற்றைய வாலிபர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் கலைமகள் பாடசாலை வீதியைச் சேர்ந்த 18 வயதுடைய எம். அஸ்மத் சஹி மற்றும் ஏறாவூர் தைக்கா வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய எஸ். ஆக்மல் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்களது தலையில் பலத்த காயங்கள் காணப்பட்டன.
விபத்தடன் சம்பந்தப்பட்ட வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ். நசிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

