நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆத்தடி தோட்டத்தில், கம்பியில் சிக்கியிருந்த சிறுத்தையொன்றை, நேற்று வியாழக்கிழமை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, ரந்தெனிகல வனவிலங்கு முகாமைத்துவ கால்நடை வைத்தியப் பிரிவின் பொறுப்பதிகாரி வனவிலங்கு கால்நடை வைத்தியர் அகலங்க பினிதிய தெரிவித்தார்.
சுமார் மூன்று அல்லது நான்குவனவிலங்கு கால்நடை வயதுடைய, நன்கு வளர்ச்சியடைந்த பெரிய பெண் சிறுத்தையொன்றே இவ்வாறு கம்பியில் சிக்கியிருந்ததாகவும், அதன் இடுப்புப் பகுதியில் கம்பி இறுக்கமாகச் சிக்கியதால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் குறித்த பகுதியில் இந்தக் கம்பி மாட்டுப் பொறி வைக்கப்பட்டிருந்ததாகவும், இரவு நேரத்தில் அப்பகுதிக்கு வந்த சிறுத்தை அதில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கம்பியில் சிக்கியுள்ள சிறுத்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் உடல்நிலையைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் ரந்தெனிகல வனவிலங்கு முகாமைத்துவப் பிரிவின் பொறுப்பதிகாரி வனவிலங்கு கால்நடை வைத்தியர் அகலங்க பினிதிய மேலும் தெரிவித்தார்.
ரந்தெனிகல வனவிலங்கு முகாமைத்துவப் பிரிவு மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் இணைந்து கம்பியில் சிக்கியிருந்த சிறுத்தையை மீட்கும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

