புதிய பணிப்பாளராக வைத்தியகலாநிதி ஜீ. சுகுணன் நியமனம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக கடமையேற்ற வைத்திகலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களுக்கு அமோக வரவேற்பு இன்று (04.11.2026) திகதி இடம்பெற்றது..

அர்ப்பணிப்பும் அனுபவமும் நிறைந்த வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்கள் மட்டக்களப்பு மண்ணுக்கும், சுகாதாரத் துறைக்கும் பல்வேறு பதவிகளில் இருந்து சேவையாற்றியுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலை பணிப்பாளராகவும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் வவுணியா வைத்தியசாலையின் பணிப்பாளராகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக  இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவத்துறையில் நீண்ட  அனுபவத்தைக் கொண்டுள்ள இவர், தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளது இப்பகுதி மக்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும் என இதன் போது பலராலும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

மக்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தேவைகளையும், இங்கிருந்து சிகிச்சை பெற்றுச் செல்லும் மக்களின் சிக்கல்களையும் தான் நன்கு அறிந்திருப்பதாகவும் இவற்றிற்கான தீர்வினை மிக விரைவில் பெற்றுக்கொடுக்க முன்னின்று செயற்படவுள்ளதாக வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் அவர்கள் இதன் போது தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி மைதிலி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி, மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் உள்ளிட்ட கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் உயிரதிகாரிகள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்கள் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்று புதிய பணிப்பாளரை வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *