ஆடை ஏற்றுமதி 5.8% வீழ்ச்சி – திலித் ஜயவீர குற்றச்சாட்டு!

ஆடை ஏற்றுமதி 5.8 சதவீதத்தால் வீழ்ச்சி:திலித் ஜயவீர எம்.பி குற்றச்சாட்டு
நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்ல அரசாங்கத்திடம் புதிய மூலோபாயத் திட்டங்கள் எதுவும் இல்லையென குற்றஞ்சாட்டிய சர்வசன அதிகாரம் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர, பழைய அரசாங்கங்கள் முன்னெடுத்த திட்டங்களையே தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளின் முதல் மூன்று காலாண்டுகளுக்கான ஏற்றுமதி புள்ளிவிபரங்களை ஒப்பிடும்போது, நாட்டின் முக்கிய ஏற்றுமதித் துறைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இலங்கைக்கு அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஆடை ஏற்றுமதித்துறை 5.8 சதவீதத்தாலும் தேயிலை ஏற்றுமதி 6.8 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளன.

ஏற்றுமதியில் சுமார் 5 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறினாலும் அந்த வளர்ச்சிக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை பெற்றுக்கொடுத்திருப்பது பெற்றோலியப் பொருட்களின் ஏற்றுமதியாகும். இவை இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைத்துள்ள வளர்ச்சியாகும்.

எனவே, ஏற்றுமதித்துறையில் உண்மையான நிலைமையை ஆராயும்போது வீழ்ச்சியே காணப்படுகிறது.ஏற்றுமதியாளர்களுக்கு சர்வதேச சந்தையில் போட்டியிடுவதற்குத் தேவையான குறைந்த செலவிலான மின்சாரம், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?மேலும், நாட்டுக்குத் தேவையான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் கிடைப்பதற்கான சூழல் தற்போது இல்லை. சட்டக் கட்டமைப்பு, நீதித்துறை மற்றும் நாட்டின் நிர்வாக முறைமை தொடர்பான நம்பிக்கை உறுதிப்படுத்தப்படாத நிலையில் வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்க்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *