இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற புகழ்பெற்ற ICN India – Goa Natural Bodybuilding Championship போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்ற மட்டக்களப்பு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஜிஜானந், ஆறு பிரிவுகளில் போட்டியிட்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
இதன்போது, Men’s Classic பிரிவில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், Men’s Bodybuilding பிரிவில் இரண்டாமிடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார்.
மேலும், இரண்டு பிரிவுகளில் மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கங்களையும், ஏனைய இரண்டு பிரிவுகளில் முறையே நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களையும் பெற்றுள்ளார்.
குறிப்பாக, ICN India Goa Natural Bodybuilding போட்டியின் Men’s Classic பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இலங்கையர் என்ற வரலாற்றுச் சாதனையையும் ஜிஜானந் படைத்துள்ளார்.
கடுமையான பயிற்சி, விடாமுயற்சி, கட்டுப்பாடான வாழ்க்கை முறை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் இந்த வெற்றியைப் பெற்றுள்ள அவர், இலங்கைக்கும் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அவரது இந்தச் சர்வதேச சாதனைக்கு பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

