டீசல் விலை அதிகரித்துள்ள போதிலும், தற்போதைய சூழ்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணங்களை அதிகரிக்கப் போவதில்லை என அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் மல்ஷ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பினால் பாடசாலை போக்குவரத்துச் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், பெற்றோருக்கு மேலும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, டீசல் விலையைக் குறைக்க முடிந்தால், அதன் மூலம் கிடைக்கும் நிவாரணத்தைப் பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கும் வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
டீசல் விலை அதிகரித்தாலும் பாடசாலை போக்குவரத்துக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. முடிந்தால் டீசல் விலையை ஏதேனும் தொகையினால் குறைத்துத் தாருங்கள். அவ்வாறு செய்தால் கிடைக்கும் நிவாரணத்தைப் பெற்றோருக்கு வழங்க எம்மால் முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

