தங்கத்தின் விலையில் தொடர் வீழ்ச்சி !

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தைத் தரவுகளின்படி, கடந்த ஒரு வாரத்தில் ஒரு பவுண் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை (26) 332,200 ரூபாவாகக் காணப்பட்ட 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 326,600 ரூபாவாகக் குறைந்துள்ளது.

அதேபோன்று, 361,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை தற்போது 355,000 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, சர்வதேச சந்தையில் இந்த மாத ஆரம்பத்தில் சுமார் 4,200 டொலராகக் காணப்பட்ட ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 3,900 டொலராகக் குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு குறித்த எதிர்பார்ப்பு மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு ஆகியவை தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.

வட்டி விகிதங்கள் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பால் தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் குறைந்துள்ளதுடன், டொலர் வலுவடைந்துள்ளமையும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவையைப் பாதித்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *