2027இல் கல்விச் சீர்திருத்தங்களுக்கு கூடுதல் நிதி – பிரதமர் அறிவிப்பு!

கல்வி அமைப்பில் மிக உயர்ந்த தகுதிகள் மற்றும் திறமைகளைக் கொண்ட மனித வளங்களை இணைத்துக் கொள்வதற்கான முறைசார் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கடவலவெவ மகா வித்யாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இருமாடி கட்டிடத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் நேற்று (24) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் சுமார் 55 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளதுடன், இது எட்டு ஆரம்பப் பிரிவு வகுப்பறைகளைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரின் பங்கேற்புடன் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களுடன் சுமுகமாக உரையாடிய அவர் வகுப்பறைகளையும் பார்வையிட்டார்.

அங்கு கருத்துத் தெரிவித்த கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2027 ஆம் ஆண்டிலும் கல்வி மாற்றத்திற்காகப் பெருமளவு முதலீடு செய்ய எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

“இந்த ஆண்டு முதல் நாங்கள் நடைமுறைப்படுத்தும் கல்விச் சீர்திருத்தங்களின் முதன்மை நோக்கம், அறிவு, திறன்கள் மற்றும் நல்ல விழுமியங்கள் நிறைந்த பிரஜையை நாட்டிற்கு வழங்குவதாகும்.

இதுவரை நமது கல்வி முறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது பிள்ளைகளுக்கு அறிவை வழங்கி பரீட்சைகளுக்குத் தயார்படுத்துவதிலேயே ஆகும். ஆனால் நமக்குத் தேவையாக இருப்பது, பெற்றுக்கொள்ளும் அறிவை நடைமுறையில் பயன்படுத்தி சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் திறமையுள்ள பிள்ளைகள் குழுவை உருவாக்குவதாகும்.

அதற்காக புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல், ஆசிரியர் பயிற்சி மற்றும் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்களை நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

அதேபோல் 2027 ஆம் ஆண்டிலும் கல்வி மாற்றத்திற்காகப் பெருமளவு முதலீடு செய்ய நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

பல ஆண்டுகளாகத் தாமதமடைந்திருந்த ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனங்களை மீண்டும் ஆரம்பித்து, திறமைகள் மற்றும் ஆற்றல்களுக்கு முன்னுரிமை அளித்து கல்வி அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பெற்றோரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்கி, தம்மை விட உயர்நிலைக்குக் கொண்டு செல்வதாகும்.

எனவே பிள்ளைகளின் கல்விக்காகப் பெற்றோர் சுமக்கும் சுமையைக் குறைத்து, அந்தப் பொறுப்பின் ஒரு பகுதியை அரசாங்கம் என்ற ரீதியில் நாமும் பொறுப்பேற்க வேண்டும்.

நமது பிள்ளைகளிடம் மிகப்பெரிய திறமைகளும் ஆற்றல்களும் உள்ளன. அந்தத் திறமைகளை வளர்த்துக்கொண்டு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்குப் பங்களிப்பதற்குத் தேவையான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவதே நமது நோக்கமாகும். அதற்காகவே நாங்கள் இந்தக் கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துகிறோம்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *