மட்டக்களப்பு, செங்கலடி பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காட்டு யானைகள் நகருக்குள் நுழைந்து குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கட்டிடங்களைச் சேதப்படுத்தி வருவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
செங்கலடி கறுத்தப்பாலம் ஊடாக நகருக்குள் நுழையும் யானைகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாகவும், செங்கலடி சித்திவிநாயகர் ஆலயப் பகுதியில் உள்ள கட்டிடங்களையும் யானைகள் சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கறுத்தப்பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டதன் காரணமாகவே யானைகள் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வருவதாக மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும், அரச காணிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிலர் இயந்திரங்களைப் பயன்படுத்திக் காடுகளை அழித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை, யானைகள் நகருக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் போதியளவில் முன்னெடுக்கப்படவில்லை எனவும், மின்சார வேலி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மறுபுறம், செங்கலடி வட்டார உறுப்பினர் அ. நிதர்சன், இரவு பகலாக அப்பகுதிக்கு வரும் காட்டு யானைகளை விரட்டுவதில் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் வரும் யானைகளை யானை வெடிகளை வீசி விரட்டுவதற்கும் அவர் நடவடிக்கை எடுத்து வருவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
காட்டு யானைகளால் மக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட பொறுப்புடைய தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், காடழிப்பு மற்றும் காணி ஆக்கிரமிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

