பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முக்கோண ஒருநாள் தொடரில் இலங்கை அணி இன்று (22) இங்கிலாந்துடன் மோதவுள்ளது. ராவல்பிண்டியில் பகலிரவு போட்டியாக இன்று பிற்பகல் 1.30 இற்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டியில் இரு அணிகளும் முதல் வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கவுள்ளன.
இந்த முக்கோண ஒருநாள் தொடரில் இரு அணிகளும் போட்டியை நடத்தும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தன. இதனால் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினத்தில் வெற்றிபெறுவது இரு அணிகளுக்கும் தீர்க்கமானதாக அமையும்.
இலங்கை அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடிவிட்டே பாகிஸ்தான சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த ஒருநாள் தொடரை இலங்கை அணி 1–2 என இழந்தது. ஹரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் வலுவாக செயற்பட்டு வருவது இலங்கை அணிக்கு சவாலாக அமையும். எனினும் துணைக் கண்டத்தில் இடம்பெறும் போட்டி என்பதால் அது இலங்கை அணி ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்திலேயே இலங்கை அணி தொடர்ந்து ஆடி வருகிறது. அதனால் அந்த மைதானம் பற்றிய பரீட்சயம் இலங்கை அணிக்கு அதிகம் உள்ளது.
முதல் போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 306 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய இலங்கை அணி பின் வரிசையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. இந்நிலையில் துடுப்பாட்ட வரிசையில் இன்றைய தினத்தில் மாற்றங்கள் செய்யவும் வாய்ப்பு உள்ளது.
இலங்கை – இங்கிலாந்து அணிகள் இதுவரை மோதிய 85 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 39இல் இலங்கை அணி வெற்றியீட்டி இருப்பதோடு 42 போட்டிகளில் இங்கிலாந்து அணியால் வெல்ல முடிந்துள்ளது. எனினும் பாகிஸ்தானில் இரு அணிகளும் ஒருநாள் போட்டி ஒன்றில் மோதுவது இது மூன்றாவது முறை என்பதோடு முந்தைய இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியீட்டியுள்ளன.இலங்கை சுற்றுலா

