நாடு முழுவதும் கடும் மின்னல், கனமழை அபாயம் – சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய இடியுடன் கனமழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டை சுற்றியுள்ள வங்காள விரிகுடா கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள கீழ் வளிமண்டல தழம்பல் காரணமாக, நாடு முழுவதும் மேகமூட்டமான வானிலையுடன் மழைப்பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, மேற்கு, வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுர மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ-க்கு மேல் கனமழையும், ஏனைய சில இடங்களில் 75 மி.மீ-க்கு மேல் மிதமான கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அத்துடன், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *